செங்கோல் மகாத்மியம்

The Mace

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”. இது அவைத்தலைவரினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் நிர்வாக அதிகாரத்தை அடையாளப்படுத்துவது. இது அதிகாரம் செலுத்தப்படும் வட மாகாணத்தின் கலாசார பண்பாட்டு பாரம்பரிய மரபுகளை அடியொற்றியதாகப் பார்வைக்கு எளிமையாக, கைக்குள் அடங்கும் கனம் கொண்டதாக, 45” நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பால் மரத்தினால் தண்டம் செய்தல் வேண்டுமென்ற விதிக்கமைய முழு வடிவமும் வேப்ப மரத்தினால் ஆக்கப்பட்டு பனை, பூவரசு, மஞ்சள்நுணா, கருங்காலி என்ற நான்கு மரங்களையும் இணைத்து வடக்கின் இயற்கை வளங்களைப் பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பீடம் 2.1” விட்டத்தில் பித்தளை உலோகத்தினால் கலை வேலைப்பாட்டுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உருவாக்கம் பெற்ற இனக்குழுமத்தின் தோற்றத்தின் அடிப்படை நாகமரபு என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பிணைந்த நாகம் செதுக்கப்பட்டுள்ளது. இது இனக்குழுமத்தைக் குறித்து நிற்பதோடு வளம், செழுமை, வம்ச விருத்தி என்பதைக் காட்டும் குறியீடாகவும் கொள்ளலாம். பிணைந்த நாகத்தின் வரிவடிவம் 2.5” விட்டம் கொண்டதாகவும் இனக்குழுமத்தின் ஐக்கியத்தையும் இணக்கப்பாட்டையும் குறித்து நிற்கின்றது.

இச் செங்கோலில் செப்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, பொன் ஆகிய ஐந்து உலோகங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிணைந்த நாகத்தின் மேல் அமைந்துள்ள மூன்று புரிகளும் செப்பு, வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களினால் கலை வேலைப்பாட்டுடன் அழகுற வடிவமைக்கபட்டுள்ளது.

இதன் மேற் பகுதியில் மூன்று வரிவடிவங்கள் 2.1” விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது வடக்கில் வாழும் மக்கள் பேசும் மூன்று மொழிகளையும் குறித்து நிற்கிறது. 2.75” விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிவத்தில் வடக்கு மக்களுடைய பிரதான உணவான நெல் எனும் தானியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது செழுமை, வளம் என்பதையும் குறிக்கும்.
அதன் மேற்பகுதியில் 3” விட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு இதழ்களும் இலங்கையின் நான்கு மதங்களையும் குறித்து நிற்கின்றன. இதன் மேல் சற்சதுரமாக உள்ள பீடத்தின் நடுவில் வடிவமைக்கப்பட்டுள்ள சூரியன் வட மாகாணத்திற்குரிய கொடியில் பொறிக்கப்பட்டுள்ள சூரியனைக் குறிப்பதாகவும், இருள் அகற்றி ஒளி கொடுக்கும் சூரியன் போன்று வட மாகாண சபையின் ஆட்சியின் ஒளி வீச்சை எடுத்துக் காட்டுவதாகவும் பாரபட்சமற்ற ஆட்சி முறைக்கான குறியீடாகவும் அமைந்துள்ளது. இது பித்தளையினால் வடிவமைக்கப்பட்டுத் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

இதன் இரு மருங்கிலும் மஞ்சள்நுணா கருங்காலி, பனை, பூவரசு என நான்கு மரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மேல் 2.5” விட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இதழ்கள் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைக் குறித்து நிற்கின்றன. இதன் மேற்பகுதி 6” விட்டத்தில் கூம்பு வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கற்பகதருவின் (பனை) (கற்பகத்தரு கேட்பதெல்லாம் கொடுக்கும்) ஓலை செதுக்கப்பட்டுள்ளது. இச் செங்கோலின் மகுடத்தில் இக் கற்பகதரு நிமிர்ந்து நிற்பது ஆட்சியின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது. செங்கோலின் முடி வலம்புரிச் சங்கினைத் தரிசனம் செய்தால் எடுத்த கருமம் அத்தனையும் சுமுகமாகக் கைகூடும் என்ற கோட்பாட்டையும் இது சுட்டிநிற்கின்றது.

வடக்கில் வாழும் இனக் குழுமங்கள் நாற் சமயத்தையும் பேணி, மும்மொழி பேசி, ஐக்கியத்துடன் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு நாட்டின் இறைமையைக் காக்க கைகோத்தல் வேண்டும் என்ற அடிநாதத்தை முழுமையாக இச் செங்கேல் பிரதிபலிக்கின்றது.


செங்கோற் கையாளுகை

பேரவைச் செயலகத்தின் சம்பிரதாயங்களின் பிரகாரம் செங்கோலின்றி ஒரு கூட்டத் தொடரை நடாத்திச் செல்ல முடியாது. பேரவைச் செயலகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வேளையில் செங்கோல் உரிய இடத்தில் இருப்பது முக்கியம். அவைத் தலைவர் செயலகத்தின் மண்டபத்தினுள் நுழையும் பொழுது படைக்கல சேவிதர் செங்கோலைத் தோளில் சுமந்து கொண்டு முன்னால் வர அதைத் தொடர்ந்து அவைத் தலைவர் ஆசனத்தை நோக்கி வருவார். ஆசனத்தில் அமர்ந்ததும் அதற்கு முன்னால் செங்கோல் வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அது வைக்கப்படும். கூட்டத்தொடர் முடிந்து அவைத் தலைவர் எழுந்து செல்லும் பொழுது படைக்கல சேவிதர் செங்கோலை ஏந்தி முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் செல்வார். அவைத் தலைவரின் ஆசனத்தில் முன்னால் செங்கோல் வைக்கப்படும் பொழுது அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள சங்கின் வலம்புரி அவைத்தலைவரின் வலது பக்கத்தை நோக்கி வைக்கப்படல் வேண்டும். செங்கோல் வைப்பதற்காக மேலொன்றும் கீழொன்றுமாக இரு தாங்கிகள் உள்ளன. தலைவர் தனது ஆசனத்தில் அமர்ந்தால் மேலே உள்ள தாங்கியிலும் அவர் ஆசனத்தை விட்டு எழுந்து வந்து செயற்குழுவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் கீழே உள்ள தாங்கியிலும் வைக்கப்படும்.