சுகாதார அமைச்சு

வடமாகாண அவசர அம்புலன்ஸ் சேவை அங்குராப்பண நிகழ்வு

வடமாகாணத்தில் அவசர மருத்துவ நிலைகளிலும் விபத்துக்களின் போதும் நோயாளர்களை இயன்றளவு விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புக்களை குறைக்கும் நோக்குடன் ஓர் அவசர அம்புலன்ஸ் சேவை வடமாகாண சுகாதாரஅமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்சேவையை கடந்த 06.01.2016 ம் திகதியன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இச்சேவையை வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இச்சேவையை ஒருங்கிணைக்கும் அழைப்பு நிலையம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ளது. விபத்துக்களின் போதும் அவசர மருத்துவநிலைகள், அவசர பிரசவநிலைகளின் போது பொதுமக்கள் அச்சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும். சிகிச்சை நிலையங்களுக்கு (Clinic) செல்வதற்கோ, தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்காக செல்வதற்கோ அல்லது அவசரமற்ற மருத்துவ நிலைகளின் போதோ இச்சேவை வழங்கப்படமாட்டாது.

பொதுமக்கள் இச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 0212224444, 0212225555ஆகிய இரண்டு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும். இவ்வழைப்புகளை ஒருங்கிணைத்து இச்சேவையை வழங்குவதற்காக அழைப்புநிலைய இயக்குனர்கள் 24 மணிநேரமும் சேவையில் இருப்பர். இவர்கள் அழைப்புவந்த இடத்தைப் பொறுத்து அதற்கு அருகாமையிலுள்ள அம்புலன்ஸ் வண்டியை GPS Tracking System மூலம் அறிந்து அவ் அம்புலன்ஸ் வண்டிச் சாரதிக்கு தகவல் வழங்கப்படும். அவ் அம்புலன்ஸ் வண்டிச் சாரதி அந்நோயாளியை அக்குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று ஏற்றி நோயாளியின் நிலைக்கேற்ப அதற்குசிகிச்சை வழங்கக்கூடிய அருகிலுள்ள வைத்திசாலையில் அனுமதிப்பார்.

இச்சேவையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். தற்போது இச்சேவை வலையமைப்பில் வடமாகாணத்தில் உள்ள 100 வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விபத்துகளின் போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் இச்சேவையை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அவசரமற்றமருத்துவ நிலைகளின் போது இச்சேவையை அழைத்து துஸ்பிரயோகம் செய்தால் அவசர நோயாளர்களை வைத்தியசாலைகளுக் கிடையே இடமாற்றம் செய்யும் சேவை பாதிக்கப்படலாம். எனவே இச்சேவையை துஸ்பிரயோகம் செய்யாது பாவித்துப் பயனடையுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.