விவசாய அமைச்சு

மருதங்கேணி மாமுனை ஏரியில் 450 000 மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டன

வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைவாக ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள மருதங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாமுனை ஏரியில் மீன் குஞ்சுகள் வைப்பிலிடும் நிகழ்வு 16 நவம்பர் 2016 அன்று நடைபெற்றது.

வடமாகாண மீன்பிடி அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) ரூபா ஒரு மில்லியன் பெறுமதிபான 450 000 மீன்குஞ்சுகள் கொள்வனவு செய்யப்பட்டு குறித்த ஏரியில் வைப்பிலிடப்பட்டுள்ளன. இவ் ஏரியில் சுமார் 120 இற்கு அதிகமான குடும்பங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நிகழ்வானது மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுடன் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சலீபன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவகர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், மீனவ சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் குறித்த பகுதி கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.