விவசாய அமைச்சு

வட மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

வடமாகாண தொழில் முயற்சியாளர்கள் நவீன நுட்பங்களை பயன்படுத்துவதனூடாக ஏற்றுமதி நோக்கிய உற்பத்திகளை மேற்கொள்ளவும் தொழில் முயற்சியை விரிவுபடுத்தவும் ஏதுவாக வேலைப்பட்டறை ஒன்றினை ஜனாதிபதி செயலகத்தின் பேண்தகு நிலைபேறான அபிவிருத்தி பிரிவும், ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் வடமாகாண விவசாய அமைச்சுடன் இணைந்து 05.04.2018 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியது. 

மேற்படி செயலமர்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் சார்பில் விவசாயத்துறை நவீன  மயமாக்கல் செயல்த்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் ரோகண கமகே அவர்களும் ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் நிபுணத்துவ ஆலோசகர் அசோக கருணாரட்ண அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இச் செயலமர்வு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இச் செயலமர்வுக்கு பதிவு செய்யப்பட்ட 300 தொழில் முயற்சியாளர்கள் வருகைதந்திருந்தனர்.

விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் ஊடாக வடமாகாண தொழில் முயற்சியாளர்கள் உதவுதொகை களையும் வங்கிக் கடன்களையும் பெற்றுக் கொள்வதற்காக எவ்வாறான முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும் அவர்களது வேண்டுகோள்கள் எவ்வெவ் அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகின்றது என்பது தொடர்பான விரிவான கருத்துப் பகிர்வுகள் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் சார்பிலும், ஜனாதிபதி செயலகத்தின் சார்பிலும் துறைசார் வளவாளர்களால் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய பயனாளிகளது கருத்துக்களும் சந்தேகங்களும் ஆராயப்பட்டன அத்துடன் விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனடைந்திருக்கும் பயனாளிகளது அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது.