சுகாதார அமைச்சு

சர்வதேச ஓட்டிசதினம் கொண்டாடப்பட்டது

சர்வதேச ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 02 ஏப்ரல் 2018 அன்று யாழ்ப்பாணம் சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் 'மாதவம்' மூளை, நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளுக்கான புனர்வாழ்வு நிலையம் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

அன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில், பணிப்பாளர் வைத்திய கலாநிதி.த.சத்தியமூர்த்தி மற்றும் குழந்தை வைத்திய நிபுணர். திருமதி. கீதாஞ்சலி சத்தியதாஸ் ஆகியோரின் தலைமையில், சர்வதேச ஓட்டிசம் தினத்தினை அடையாளப்படுத்தும் முகமாக பலூன்களை பறக்கவிடும் நிகழ்வு இடம்பெற்றது.

ஓட்டிசம் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு நகரின் பல்வேறுபட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளும், ஓட்டிசம் விழிப்புணர்வு காட்சிப்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. கார்கில்ஸ் சதுக்கத்தில் பெற்றோர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். 

அன்று பிற்பகல் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை தமது செயலகத்தில் சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டார். 

அன்று மாலை 'மாதவம்' நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 4 வருட பூர்த்தியையும், உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தினையும் முன்னிட்டும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள மாதவம் நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில், கொழும்பு சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. சித்ரமாலி டி சில்வா, வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன், மாகாண சமூக மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி. இ.கேசவன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 

இதன்போது உரை நிகழ்த்திய கொழும்பு சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. சித்ரமாலி டி சில்வா அவர்கள், இவ்வாறானதொரு நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைந்திருப்பதையிட்டுத் தான் மகிழ்வதாகவும், வடமாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், பணியாளர்கள் அர்ப்பணிப்பு மிகுந்தவர்கள் என்பதைத் தாம் முன்பே உணர்ந்துள்ளதாகவும், இந்நிலையத்தினது வளர்ச்சிகண்டு மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்குத் தன்னாலான உதவிகளை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து மாதவம் நிலையத்தின் இணையத்தளமான www.mathavam.org யினை தேசிய உளநலப் பணிப்பாளர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

மேற்படி நிகழ்வுகளில் யாழ் மாவட்டத்தில் சேவை புரியும் குழந்தைநல மருத்துவ நிபுணர்கள், உளமருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகள் மற்றும் பெற்றோரும்  கலந்து கொண்டனர். 

'மாதவம்' மூளை, நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தற்போது 15 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருவதுடன், 42 பிள்ளைகள் பின்-தொடர் சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். 

தற்சமயம் நிலைய கட்டடத்தினை அமைப்பதற்குத் தேவையான நிதியினை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமையினால், இந்நிலையத்தினை அமைப்பதற்கு வேண்டிய ஏறத்தாழ மூன்று பரப்பு விஸ்தீரணங் கொண்ட காணியொன்றினை யாழ் நகரையண்டிய பிரதேசத்தில் நன்கொடையாக வழங்க முன்வரும் நல்லுள்ளங் கொண்டோர் உடனடியாக சுகாதார திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500