முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர்  கலந்துரையாடல்

சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் ஊதியத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை மறு அறிவித்தல்வரை பணியிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பணித்துள்ளார்.

அடுத்து நடைபெறவுள்ள வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்து தகுந்த தீர்வொன்றினை பெற்றுக்கொள்ளும்வரையில் ஆசிரியர்கள் கடமையாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மேஜர் கொஸ்வத்தைக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

கடந்த 15வருடங்களுக்கு மேலாக முன்பள்ளி ஆசிரியர்களாக 300 ரூபா முதல் 3 ஆயிரம் ரூபாவரையான சம்பளம் பெற்று கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டுவந்த நாம் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் 30 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட ஊதியத்தில் சேவை ஆற்றி வருகின்றோம். தற்போது திடீர் என எமது ஊதியங்களை நிறுத்தி பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது எமக்கு ஒரு சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி முன்பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் 26 டிசெம்பர் 2018 அன்று ஈடுபட்டிருந்தனர். அவர்களின் கோரிக்கை கடிதங்களை பெற்றுக்கொண்ட ஆளுநர் ஜனாதிபதியுடன் பேசி நல்ல முடிவொன்றினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.