சாவகச்சேரி பிரதேச சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் கலந்துரையாடல்

சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் வாமதேவன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் வட மாகாண  ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் 26 டிசெம்பர் 2018 அன்று சந்தித்து கலந்துரையாடினார்கள். 

சாவகச்சேரி பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் கள்ளமண் அகழ்வுகள் தொடர்பிலும் அதனை நிறுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படவேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். 

மேலும் பிரதேசசபையின் சேவையை அதிகரிக்க டபிள்கப் வாகனம் ஒன்றினை பெற்றுத்தருமாறும் சபைக்கு போதிய வருமானம் இல்லாமை காரணமாக வீதிகள் மற்றும் வீதி விளக்குகளை பொருத்துவதற்காக  மேலதிக வருமானங்களை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். மறவன்புலோ பகுதியில் காற்றலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் அபிவிருத்தி பணிகளை செய்து வருவதாகவும் காற்றலை பொருத்துவதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்கள் குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தனர். கட்டடப் பொருட்களை அதிகளவான கனரக வாகனங்கள் கொண்டு செல்வதனால் பிரதேசபைக்கு சொந்தமான வீதிகள் பல சேதமடைந்து இருப்பதாகவும் அதனால் அப்பகுதி ஊடாக போக்குவரத்து செய்யும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தனர். 

இவற்றினை செவிமடுத்த ஆளுநர் தங்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடாத்தி மத்திய அரசின் நிதியினை பெற்றுக்கொள்வதற்கு ஆவண செய்வதாகவும் தெரிவித்தார். காற்றலை விவகாரம் மற்றும் மண் அகழ்வு தொடர்பில் நேரடியாக விஜயம் செய்து கண்காணித்த பின்னர் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.