டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்ந்து அதனை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் வட மாகாண  ஆளுநர் றெஜிநோல்ட் குரே தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் 28 டிசெம்பர் 2018 அன்று  நடைபெற்றது. 

இந்தாண்டில் 1344 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக டிசம்பர் 24ம் திகதிவரையில் 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார். கடந்த 27ம் திகதி முதல் டெங்கு நோய் தடுப்பு விசேட செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாவும் இதன்போது யாழ்ப்பாணம் பசார் வீதியில் 30 இடங்களில் டெங்கு நோய் நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று நாவாந்துறை பகுதியில் 45 இடங்களை இனங்கண்டிருப்பதாகவும் அவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். 

இங்கு கருத்து தெரிவித்த  ஆளுநர் டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காக முழு நேரமும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலதிக தேவைகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் பணி விரைவாக முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் ம.பற்றிக்நிறஞ்சன், வட மாகாண சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் டெங்கு நோய் தடுக்கும் விசேட செயலணியை சேர்ந்த பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.