விவசாய அமைச்சு

மாகாண மட்டத்திலான படைப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வடக்கு மாகாண விவசாய அமைச்சு, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் மத்திய விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து ஒழுங்குபடுத்திய மாகாண மட்டத்திலான படைப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களின் தலைமையில் 29.01.2019 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. வரவேற்புரையினை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.க.தெய்வேந்திரம் அவர்கள் ஆற்றினார். அதனைத்தொடர்ந்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் தலைமையுரையினை ஆற்றினார். இவர் தனது உரையில் படைப்புழுவின் தாக்கத்திலிருந்து விரைவாக மீண்டெழுந்த மாகாணமாக வடமாகாணம் மாறவேண்டும் என்றும் இதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்விழிப்புணர்வினை மாவட்ட மட்டத்திலும் நடாத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து படைப்புழுத்தாக்கத்தின் வெளிப்பாடு தொடர்பான காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டது. இம்மாகாண மட்ட விழிப்புணர்வு கருத்தரங்கின் நோக்கங்கள் தொடர்பாக வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் வெளிப்படுத்துகை மூலம் விளக்கமளித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர்(ஆராய்ச்சி) கலாநிதி.ச.ஜே.அரசகேசரி அவர்கள் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான நிறுவனங்களின் ஒருங்கிணைப்பும் பொறுப்புக்களும் தொடர்பாக வெளிப்படுத்துகை மூலம் விளக்கமளித்தார். தொடர்ந்து படைப்புழுவின் தாக்கமும் அவற்றின் கட்டுப்பாட்டு முறைகளும் தொடர்பாக உதவி விவசாயப்பணிப்பாளர்(ஆராய்ச்சி) திரு.சி.இராஜேஸ்கண்ணா அவர்கள் வெளிப்படுத்துகை மூலம் விளக்கமளித்தார். இதனையடுத்து பங்குபற்றுனரின் கருத்துக்களும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இறுதியாக யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.சிறீரங்கன் அவர்களின் நன்றியுரையுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நிறைவு பெற்றது.

படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சோளப்பயிரின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாகாண மற்றும் மாவட்ட மட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என நானூறிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இப்படைப்புழு தொடர்பாகவும் அதன் கட்டுப்பாடு முறைமைகள் தொடர்பாகவும் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பூரண அறிவினை பெற்றுச்சென்றனர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிற்கு இப்படைப்புழு தொடர்பான நாட்காட்டி மற்றும் துண்டுப்பிரசுரம் என்பன விநியோகிக்கப்பட்டன.