விவசாய அமைச்சு

வரிசை முறை விதையிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான அறிமுக வயல்விழா

வரிசை முறை விதையிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான அறிமுக வயல்விழா 31.01.2019 ஆம் திகதி காலை 10.30 மணியளவில்  நவாலி வடக்கிலுள்ள திரு. உதயசூரியர் எனும் விவசாயியின் 'தெனி" நெல் வயலில் சண்டிலிப்பாய் விவசாயப் போதனாசிரியர் திரு. ஜீவன் குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறீரங்கன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள்,  விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் சண்டிலிப்பாய் விவசாயப் போதனாசிரியர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் முதலானோர் இவ் வயல்விழாவில் பங்குபற்றி பயன்பெற்றனர். நெற்பயிர்ச் செய்கையில் வீசி விதைப்பு முறையினை விட வரிசை முறை விதையிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம்  கிடைக்கக் கூடிய உயர்ந்த சாதகமான நன்மைகள் தொடர்பாகவும் பங்குபற்றுநர்கள் கற்றுக்கொண்டனர்.

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரிசை முறையில் விதையிடும் கருவியினை நான்கு சில்லு உழவு இயந்திரத்தில் இணைத்து வரிசை முறையில் நெற்செய்கையானது முன்மாதிரித் துண்டமாக நவாலி வடக்கிலுள்ள திரு. உதயசூரியர் எனும் விவசாயியின்  வயலில் செய்கை பண்ணப்பட்டது. இம் முன்மாதிரித் துண்டத்தில் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் 'டீபு - 406" வர்க்க நெல் இனமும், நான்கு ஏக்கர் விஸ்தீரணத்தில் "ஆட்டக்காரி" வர்க்க நெல் இனமும் செய்கை பண்ணப்பட்டது. வீசி விதைப்பு முறையில் பயன்படுத்தப்படும் விதை நெல்லில் அளவுடன் ஒப்பிடும் போது இம் முறையில் பயன்படுத்தப்படும் விதை நெல்லின் அளவு 50மூ இலும் குறைவாகவே காணப்படுகின்றது. மேலும் இவ் வரிசை விதைப்பு  முறையில் தீங்கு விளைவிக்கக் கூடிய களைகள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளமையினை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இம் முறை மூலம் பயிர் உற்பத்தித் திறனும் அதிகரித்துக் காணப்படுகின்றது. விதை நெல்லிற்கான செலவு மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான கூலி என்பன இம் முறையில் குறைவடைவதனால் உற்பத்திச் செலவும் 25மூ ஆல் குறைவடைகின்றது. 

வரிசை முறையில் நெற்செய்கையினை முன்மாதிரித் துண்டமாக மேற்கொண்ட இக் குறித்த  விவசாயி மற்றைய செயன்முறைகளையும் விளக்கிக் கூறினார். நெற்செய்கையினை மேற்கொள்வதற்கு முன்னர் இக் குறித்த வயல்க் காணியின் மண்ணிற்கு சேதனப் பசளை இடப்பட்டதுடன், வீட்டில் தயாரிக்கப்பட்ட சேதன திரவப் பசளைகளும் நெற்பயிருக்கு  விசிறப்பட்டது. இதன் மூலம் தான் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது எனவும் குறிப்பிட்டார்.

பாடவிதான உத்தியோகத்தர் பண்;ணை இயந்திரவியல் திரு.நா.நிறஞ்சன்குமார் அவர்கள் வரிசை விதைப்பு இயந்திரத்தினைப் பயன்படுத்தி எவ்வாறு விதை நெல்லினை வரிசையில் விதைப்பது என்பது பற்றியும், இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள் தொடர்பாகவும் பங்குபற்றியவர்களிறகு விளக்கமளித்தார்.

இவ் வயல்விழாவின் இறுதியில்  பங்குபற்றிய விவசாயிகள் பலரும் இத் தொழில்நுட்பத்தினையும் இதன் மூலம் கிடைத்த பலாபலன்களையும், பெறப்பட்ட நன்மைகளை ஏற்றுக்கொண்டதுடன்; அடுத்துவரும் காலபோகத்தில் தாங்களும் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடுவதற்குரிய வழிகாட்டல்களை வழங்குமாறு வேண்டிக்கொண்டனர்.