விவசாய அமைச்சு

கிளிநொச்சி மாவட்டமத்தில் படைப்புழுவிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

நாட்டில் தற்பொழுது பயிர்ச்செய்கையில் எழுந்துள்ள பெரும் பிரச்சினையாக படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் தாக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் கண்டறியப்பட்டு தற்பொழுது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் இப் படைப்புழுவானது 100 இற்கும் மேற்பட்ட பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. 

படைப்புழுவின் தாக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக படைப்புழுவிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியானது 31.01.2019 ஆம் திகதி  காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி A9 வீதியூடாக கிளிநொச்சி பொதுச்சந்தையை காலை 10.30 மணியளவில் சென்றடைந்தது. இதனைத் தொடந்து படைப்புழுவின் தாக்கம் மற்றும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பாக பங்குபற்றுநர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டது. இப்பேரணியானது கிளிநொச்சி  பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

இப் பேரணியானது  கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர் திரு.அ.செல்வராசா, பரந்தனில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.எஸ்.சிவநேசன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு.வே.ஆயகுலன், மத்திய மற்றும்  மாகாண விவசாயத் திணைக்களத்தின்  பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள்,  மற்றும் 200 இற்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றலுடன் இவ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.